அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
தந்தை சுட்டுகொல்லப்பட்டதுடன் தாய் மற்றும் சகோதரி காணாமல் போன நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய குறித்த இளைஞன் நாடுகடத்தப்பட்டுள்ளார் என்று அந்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவி எனப்படும் 25 வயதான அந்த புகலிட கோரிக்கையாளரின் பிணைத்தல் விசா காலாவதியான பின்னர், கடந்த 4 மாதங்களாக அங்குள்ள தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கொடூர போரில் பாதிக்கப்பட்ட நிலையில் 2009ஆம் ஆண்டு அவரது சகோதரர் கொல்லப்பட்டதாகவும், இந்த நிலையில் அவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய உள்துறை விவகார அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்த அவர், அந்த கடிதத்தில், 2018ஆம் ஆண்டு சனவரி மாதம் 5ஆம் நாள் தனது தாயாரிடம் இருந்து அழைப்பு வந்தது எனவும், அதன்பேர்த தனது தந்தை தோட்டத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று தாயார் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும் இலங்கை அதிகாரிகள் தனது தந்தைக்கு மரண சான்றிதழ் வழங்கவில்லை என்றும், தான் தனது தாய் மற்றும் சகோதரியினதும் தொடர்பையும் இழந்து விட்டதாகவும், அவர்களிடம் இறுதியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் நாள் தொடர்பு கொண்டதாகவும் அவர் குறி்பிட்டுள்ளார்.
செஞ்சிலுவை சங்கத்தினரிடம் அவர்களை தேடுமாறு கோரிக்க விடுத்த போதிலும், தனது சகோதரி மற்றும் தாய் ஆகிய இருவரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், செஞ்சிலுவை சங்கமும் தனது தாயாரை கண்டுபிடிக்க தவறியுள்ளது என்வும் அவர் தனது கடிதத்தில் விபரித்துள்ளார்.
கவியின் குடும்ப சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து, பாதுகாப்பு விசா விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அவுஸ்திரேலிய உள்துறை விவகார அமைச்சரிடம் கவி கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவரது கோரிக்கைகள் குறித்து செவிமடுக்காமல், அவர் கடந்த மே மாதம் 17ஆம் நாள் நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று தற்போது அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.