பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியமையினால், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்த போதிலும், சமாதானம் ஏற்படவில்லை என்று இல்ஙகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘தெரிந்தால் கற்றுக்கொடுங்கள் – தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற தொனிப்பொருளில், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் நேற்றையநாள் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம் எனவும், மலேசியாவில் மலாய் மற்றும் தமிழ் மக்களிடையே இனவாத முரண்பாடு உள்ளதனை அவதானித்த சிங்கப்பூர், தமது நாட்டில் இனவாத முரண்பாடு தோன்றக் கூடாது என்ற எண்ணத்தில், மலாய், சீனம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அரசகரும மொழிகளாக்கி, அவற்றை அனைவரும் கற்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்க பிரஜை ஒருவரின் வருமானத்துக்கு இணையாக சிங்கப்பூர் பிரஜையின் வருமானம் உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1983 ஆண்டு இலங்கையில் கலவரம் ஏற்பட்டு, மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் பிளவு ஏற்பட்டது எனவும், நாடு என்ற அடிப்படையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனால்தான் சமாதானத்தை ஏற்படுத்த பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்ததாகவும், 1983ஆம் ஆண்டின் பின்னர் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக நல்லிணக்கத்தை கண்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.