பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும், பாகிஸ்தானில் அமைகின்ற புதிய நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சியாக செயல்பட தயாராக இருப்பதாகவும் பிரதான கட்சியாக இருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி கூறியுள்ளது.
முன்னாள் துடுப்பாட்ட வீரரான இம்ரான் கான் கட்சிக்கு கிடைத்திருக்கும் முன்னிலையை சனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தங்கள் கட்சி மதிக்கும் என்றும் அந்த கட்சியின் மூத்தத் தலைவர் ஹம்சா ஷாபாஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குகள் எண்ணப்படும் பணியும் நடைபெற்ற போதிலும் உத்தியோக பூர்வமாக முடிவுகள் இன்னமும் அறிவிக்கபபடவில்லை.
எனினும் 100க்கும் அதிகமான தொகுதிகளில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், இந்த தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.