பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் பதவியேற்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், கடந்த 25ஆம் நாள் அங்கு நடைபெற்ற தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை.
ஆனால் இந்த தேர்தலில் அதிக இடங்களாக 116 தொகுதிகளில், முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதனால், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அந்தக் கட்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில் கூட்டணி அரசு அமைப்பதற்கு சில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இம்ரான் கான் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றார்.
இதனிடையே ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்று கொள்வார் என பாகிஸ்தான் வானொலி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் கைபர் பக்துங்க்வா மாகாண முதலமைச்சரின் பெயரை இன்னும் 48 மணி நேரத்துக்குள் இம்ரான் கான் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.