யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில், வாள்வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதல்களால் பொதுமக்கள் தூக்கமின்றி இரவைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி மற்றும் புது வீதி, கொக்குவில்- பிரம்படி வீதி ஆகிய இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், உந்துருளி ஒன்றும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகத்தை மூடியவாறு நான்கு உந்துருளிகளில் வந்த எட்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவின் தலைவரென கருதப்படும் நபரின் வீடு உட்பட, நான்கு வீடுகளின் மீது, இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அவ்வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இனந்தெரியாத அந்த நபர்கள், தாக்குதல்களை நடத்திவிட்டு எந்தவித அச்சமும் இன்றி தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.