இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை உள்ளது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக போதைப்பொருளிற்கு அடிமையானவர்களாகத்தான் இருக்கின்றார்கள் எனவும், இந்த நாட்டிலே போதைப்பொருள் அதிகம் இருக்கின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலத்திலே ஆட்சி செய்த ஆட்சியாளர்களிற்கு மத்தியிலே இப்பொழுது இலங்கையை ஆளுகின்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு போதையற்ற நாடாக மாற்றுவோம் என்று சபதமெடுத்திருந்த போதிலும், இவர்களது ஆட்சியில்தான் இன்று இலங்கையிலே குறிப்பாக வடமாகாணத்தில் அதிகளவான பேதைப்பொருள் பாவனையில் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான போதைப்பொருள் பாவனையால் இளைஞர்களின் வாழ்க்கையை பாதிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும், எத்தனையோ அழிவுகளை தடுத்ததாக கூறும் இந்த அரசால் இந்த போதைப்பொருளை மட்டும் தடுக்க முடியவில்லை என்ற நிலையில், இதன் காரணமாக எங்களது இளைஞர், யுவதிகள் தங்களது எதிர்காலத்தை சிதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனையில் உள்ள காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில் பெண்கள் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு குழுவினரால், பிறைந்துரைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் சகோதரிகள் என்பதுடன், அவர்களிடம் இருந்து 360 கிராம் கஞ்சாவும் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் முப்பதும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இருவரும் மிக நீண்ட நாட்களாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.