தென்னிந்தியாவுக்கும் பலாலிக்கும் இடையில் விரைவில் குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணிகள் வடமாகாணத்துக்குப் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு பயணப் பிரச்சினைகள் உள்ளன எனவும், இதனால் தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இணைப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
மிக விரைவில் ஒரு குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் வடமாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இலகுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது சிறிலஙகா விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பல விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன எனவும், மட்டக்களப்பு விமான நிலையம் ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது என்றும், அதுபோல விரைவில் ஹிங்குராக்கொட விமான நிலையமும் பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறந்த வான் வழி இணைப்பு முக்கியமான தேவையாக இருக்கிறது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே இந்த கருத்தை வெளியிட்டதுடன், கிழக்கு மாகாணத்துக்கான புதிய உள்நாட்டு விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே கிழக்கில் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், கிழக்கின் சுற்றுலா வளர்ச்சிக்கு உள்நாட்டு விமான சேவை பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்து குறைபாடு தான், கிழக்கில் சுற்றுலா அபிவிருத்திக்கு உள்ள பிரதான தடைக்கல்லாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும், மத்தல விமான நிலைய அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விமான சேவை மூலம் இந்தக் குறைபாட்டுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.