தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை முன்நிறுத்தும் என்பதில் தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பேசுவதுண்டு எனவும், சில சமயங்களில் அவ்வாறாக பேசியவர்கள் தோற்றதும் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவகையில் தற்போதைய முதலமைச்சருடைய பெயரும் பேசப்படுகின்றது எனவும், தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் தங்களுடைய கட்சி சார்ந்த அதாவது கூட்டமைப்பினுடைய பங்காளிக் கட்சிகளில் பிரதான கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சியினுடைய ஒருவர் அனுபவம் வாய்ந்த மூத்த தன்மையுடைய ஒருவராக இருக்க வேண்டுமென்று ஒரு பொதுப்படைத் தன்மையான தீர்மானத்தையும் இயற்றியுள்ளனர் எனவும், ஏனைய பங்காளிக் கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த முறையும் மாவை சேனாதிராஜாவுடைய பெயர் பிரேரிக்கப்பட்ட போதிலும், பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையால் அவர் அதனை விட்டுக்கொடுத்து நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டு வரப்பட்டார் எனவும், எனினும் தமிழரசுக் கட்சி தன்னுடைய வேட்பாளர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது யாரென்பது தற்போது தெரியவில்லை எனவும், அதனைக் கட்சி கூடித்தான் முடிவு செய்யும் என்றும், முதலமைச்சரும் தனித்தோ அல்லது வேறு நபர்களுடன் இணைந்து கூட்டமைப்பாகவோ தேர்தலில் நிற்கக் கூடும் எனவும், இதிலும் தற்போது தளம்பல் நிலையே காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.