இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று, இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்ரன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சருக்கும், அமெரிக்கப் பதில் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
இது தொடர்பாக ரொபேர்ட் ஹில்டன் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2015, 2017ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தக் கடப்பாடுகள், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை விரிவுபடுத்துவதற்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.