யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு என்று கூறி, சிறப்பு உந்துருளிப் படையணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள காவல் நிலைய உதவி காவல்துறை அத்தியட்சகர் இன்று தெரிவித்துள்ளார்.
யாழ் .குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறப்படுவதுடன், இதன்போது யாழப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பிரிவுகளில் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10 உந்துருளிகள் அடங்கிய சிறப்பு காவல்துறை அணி ஒன்று யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 100ற்கும் அதிகமான சிவில் காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் குறித்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் காவல்துறையினரின் செயற்பாட்டுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும், வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல்களை வழங்குமாறும் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.