யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினரை அழைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தினர் எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது என்று உறுப்பினர் லோகதயாளன் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தினர் நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்று தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாக இருக்காது என்று உறுப்பினர் ரெமீடியஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் செயலக நிகழ்வோ அல்லது தலைமை அமைச்சர் அலுவலக நிகழ்வோ எதுவாக இருந்தாலும் மேடை அமைக்கும் பணியிலிருந்து பெரும்பாலான பணிகளை இராணுவத்தினரே செய்கின்றனர் எனவும், அரச நிலத்தில் அரச துறையை சார்ந்தவர்களை நிகழ்வு செய்யக் கூடாது என்று கோருவது பொருத்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாநகர சபையின் நிகழ்வுக்கு அவர்களை அழைக்கமாட்டோம் என்று மாற்றியமைக்கலாம் என்று அவர் கூறியுதை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றநிலையில் அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.