கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் சிறிலஙகா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட சிறிலஙகா இராணுவத் தளபதி, அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் முழுமையாக கைப்பற்றப் போகிறது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை எனவும், யாழ். கோட்டையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளனர் என்வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண கோட்டையில் இராணுவம் பல தலைமுறைகளாக உள்ளது எனவும், இது முதல்முறையல்ல என்றும், எனவே இராணுவம் தொடர்ந்து அங்கு நிலைகொண்டிருக்கும் எனவும், இவ்வாறான நிலையில் இராணுவம் கோட்டையை கையகப்படுத்தியதாக கூறுவதில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா இராணுவத்தினர் அங்கே இருக்கிறார்கள் எனவும், கோட்டைக்குள் இராணுவம் இருப்பது தான் வழக்கம் என்றும், ஆனால் பொதுமக்கள் எந்த நேரத்திலும் கோட்டைக்குள் வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என்றும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ் கோட்டை இலங்கையின் ஒரு பகுதியே அன்றி, அது ஈழத்துக்கோ அல்லது இந்தியாவிற்கோ சொந்தமானதில்லை எனவும், அங்கு இராணுவத்தினர் செல்வதற்கு எதிர்ப்பு வெளியிடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.