எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம் என்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மத்திய கல்லூரியின் 202 ஆவது பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வட மாகாணத்திலே 1010 பாடசாலைகள் இருக்கின்றன எனவும், இவற்றில் 120 பாடசாலைகள் 20 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன என்றும், 250 பாடசாலைகள் 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் இதன்போது தகவல் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் நகரத்தின் சில பாடசாலைகள், பருத்தித்துறை நகரத்தின் சில பாடசாலைகள், கிளிநொச்சியின் நகரத்தில் ஒரு சில பாடசாலைகள், இதேபோன்று வவுனியா, மன்னார் போன்ற நகரங்களில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர, மிகுதி அனைத்துப்பாடசாலைகளிலுமே மாணவர் பற்றாக்குறை நிலவி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வடமராட்சி கல்வி வலயத்தில் மட்டும் முதலாம் தர மாணவர்களின் தொகை ஆயிரம் மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும், ஒரு ஆண்டிலே ஒரு வலயத்திலே ஆயிரம் மாணவர்கள் குறைவடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால், எங்களுடைய மாணவர்களின் எதிர்காலம், எங்களுடைய இருப்பினுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர் ஒரு மில்லியன் தமிழ் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறது என்பதுடன், இதை விட போராளிகள், பொது மக்கள் உட்பட மூன்றறை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும், இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியோராக இருந்தாலும் சரி அல்லது கொல்லப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இவர்களின் வயதெல்லைகளைப் பார்ப்போமாக இருந்தால் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக இந்த மக்களும் எங்களிடம் இல்லை, இவர்களின் சந்ததிகளும் எங்களிடம் இல்லை என்ற நிலையில், நாங்கள் மூன்று நான்கு தலைமுறையை இழந்திருக்கின்றோம் எனவும், இப்போது இலங்கையின் சனத்தொகை பெருக்க விகிதம் முஸ்லிம்கள் ஆயிரம் பேருக்கு 8.7 பேர் என்ற அளவிலும், சிங்களவர்கள் ஆயிரம் பேருக்கு 5.5 பேர் என்ற அளவிலும் அதிகரிக்கும் நிலையில், தமிழர்கள் ஆயிரம் பேருக்கு 1.5 பேர் மட்டுமே அதிகரிக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சராசரியை விட மிகமிக குறைவான மக்கள் தொகை அதிகரிப்பில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் எனவும், கண்டிப்பாக எமது சனத்தொகை தொடர்பில் மீள் சிந்தனை கண்டிப்பாக எங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்போது இருக்கின்ற சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் எமது இனம் சென்று கொண்டிருக்குமானால், நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் மூன்றாவது இனமாக சுருங்கி விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.