சிங்களவர்கள் மரமென்றால் அதைச் சுற்றி வளரும் கொடியாக சிறுபான்மையினர் இருக்க முடியாது என்பதனை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களையும் சிறு மரங்களாக, அவர்கள் விரும்பும விதத்தில் வாழ வழி வகுத்துத் தாருங்கள் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆராயப்பட்ட நிலையில், இந்த நிகழ்வின் போது கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
சந்திரிக்கா அம்மையாருக்கு முன்னர் இலங்கையின் சனாதிபதியாக இருந்த டி.பி.விஜயதுங்க, சிங்கள மக்கள் மரமென்றால் சிறுபான்மையோர் அதைச் சுற்றி வளரும் கொடி போன்றவர்களாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார் எனவும், ஆனால் அவர் தெரிவித்த அந்தக் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.