இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்ச்சை நிலைய அதிகாரிகளாக, சிறிலங்கா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மற்றும் கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சை நாடு முழுவதிலுமுள்ள 2,268 மத்திய நிலையங்களில், எதிர்வரும் 6ஆம் நாள் முதல் செப்டெம்பர் 1ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இதற்காக 3 இலட்சத்து 21ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள், இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என்று இலங்கையின் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.