விடுதலைப் புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால், அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து பேசியிருந்தமை தொடர்பில் இதன் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், விஜயகலா மகேஸ்வரனுக்கு விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எதுவும் இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவருக்கென்றொரு அரசியல் பின்புலம் இருக்கின்றது எனவும், விடுதலைப்புலிகளின் காலத்திலேயே அரசியல் பலத்துடன் இருந்தவர் அவரது கணவர் என்றும், அந்த பலமான அரசியல் பின்புலத்தினாலேயே விஜயகலா மகேஸ்வரன் 2010 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு தான் கற்றுக் கொண்ட அரசியல் பாடங்களாலும், தனது பணபலத்தாலும் அவர் வென்றார் எனவும், எனவே அவரோ வேறெந்த தமிழ் தலைவரோ எவராக இருந்தாலும் தமது கண்முன்னால் விடுதலைப் புலிகளின் ஆட்சியைப் பார்த்தவர்கள் அவ்வாறே கூறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முப்படைகளையும் வைத்து ஒரு பெரிய நாட்டை நிர்வகிப்பதுபோல, – பொருண்மியத்துறை, கல்வித்துறை, நீதி – நிர்வாகத்துறை என்று உலகமே பார்த்து வியந்த ஒரு அரசியல் ஆட்சியை செய்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள் என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடைய காலத்தில் சிறுமிகள் கொல்லப்படவில்லை, பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை. குள்ள மனிதர்கள் வரவில்லை, கிறீஸ் மனிதர்கள் வரவில்லை, கஞ்சா என்ற சொல்லைக் கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லை என்ற நிலையில், இப்போது அவையனைத்துமே தாராளமாக எங்கள் பகுதிகளில் நடக்கின்றன எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கஞ்சா தாராளமாக வருகின்றது, வாள்வெட்டுகள் தாராளமாக நடக்கின்றன, அதனை தூண்டுவதில் சிறிலங்கா இராணுவம் பின்னணியில் நிற்கின்றது, சிறுமிகள் பலாத்காரப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலே ஒரு பெண்ணாக, ஒரு தாயின் வடிவத்திலே விஜயகலா அதனைச் சொல்லியிருந்தால், அதில் தவறேதும் இருப்பதாக தனக்குப்படவில்லை எனவும், அதன்மூலம் விடுதலைப்புலிகளை வைத்து அவர் அரசியல் செய்வதாக யாரும் கருதினால் அது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறெல்லாம் நடக்கவில்லை என்ற நிலையில், அவர்கள் மீள வரவேண்டும் என்று சொல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொரு விதமாகச் சொல்வதானால், விடுதலைப்புலிகள் இருக்கும்போது சமஷ்டி பற்றி ரணில் விக்கிரமசிங்க பேசியிருந்தார் எனவும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டுமென்பதில் சிங்களத் தலைவர்கள் அனைவருமே ஒரே விதமாகக் கதைத்தார்கள் என்றும், ஆனால் இப்போது அரசியல் தீர்வு பற்றியே பேசுகின்றார்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தால்தான் தெற்கில் உள்ளவர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவார்களானால், அவர்கள் திரும்பி வரவேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் போன்றோர் சொல்வதில் தவறேதும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.