சவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் மனித உரிமை விவகாரங்களில் கனடா குரல் கொடுத்ததை அடுத்து, கனேடிய தூதுவரை தனது நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றிய சவூதி அரேபியா, கனடாவுடனான வர்த்தக நடவடி்க்கைகளையும் முடக்கியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இது குறித்து நேற்று மாலை வன்கூவரில் வைத்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், சவூதி அரேபியாவின் இவ்வாறான தடைகளால் கனடா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிவிடாது என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நிலைப்பாட்டில் கனடா மிகவும் செளகரியமாகவே உள்ளது எனவும், கனடா எப்போதும் மனித உரிமைகளுக்காகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் என்றும், கனடாவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் பெறுமானங்களுக்கு அமைவாகவே எமது வெளியுறவுக் கொள்கைகளும் அமைய வேண்டும் என்பதையே அனைத்துக் கனேயர்களும் விரும்புகிறார்கள் எனவும், அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தமது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல தாம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமார் படாவி(Samar Badawi) உட்பட பெண்கள் உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து தாங்கள் கரிசனை கொள்வதாகவும், அவர்களையும் அனைத்து அமைதி வழியிலான மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு ச்வூதி அரேபிய அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் கனடாவின் அந்த கீச்சகப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, தனது நாட்டுக்கான கனேடிய தூதுவரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவூதி அரேபிய அரசாஙகம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.