ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்றுத் திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள கீச்சப் பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரான் மீது அதிகாரபூர்வமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், நவம்பர் மாதம் இது அடுத்தகட்ட நிலையை அடையும் எனவும் அவர் அந்த பதவிவில் குறிப்பிட்டுள்ளார்.
யாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், தாம் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்ப்பதுடன், வேறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் 2015ஆம் ஆண்டில் செய்துகொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து ஈரானுடனான அமெரிக்காவின் உறவில் விரிசல் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.