வடகொரியாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ததாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது.
அமெரிக்காவின் தடைகளையும் மீறி வட கொரியாவில் இருந்து இலங்கை ஆடைகளை இறக்குமதி செய்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரிய குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் செய்யப்பட்டமை தொடர்பான செய்தி அறிக்கைகள் தமது அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன எனவும், இலங்கை தொடர்பில் வெளியான செய்தி அறிக்கையில் அடங்கிய தகவல்கள் தவறானவை என்று அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் அனைத்துலக கடமைகளை பாதுகாக்கும் விதத்தில், இலங்கை அரசாங்கமானது கொரிய சனநாயகக் குடியரசு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் விதிகளுக்கு கட்டுப்படுகின்றது எனவம், அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உள்நாட்டு ஒழுங்குமுறைகள் தொடர்பான வர்த்தமானிகள் முறையே 06 அக்டோபர் 2017, 19 ஏப்ரல் 2018, மற்றும் 14 மே 2018 இல் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அந்த தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபுணர் குழுவோடு இலங்கை ஒத்துழைக்கிறது எனவும், அத்துடன் அவ்வப்போது பாதுகாப்புச் சபையின் நிபுணர்களின் குழுவால் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை இல்ஙகை வழங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.