ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தபோது, மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதுடன் இடைக்காலத்தடையும் விதித்தது.
இந்த நிலையில் மத்திய அரசு இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ள நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களுக்கு ஏற்கனவே கருணை வழங்கப்பட்டு விட்டதாகவும், மரண தண்டனை ஆயுள் தண்டனையாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம், இனி இன்னொரு முறை கருணை காண்பிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவர்களை விடுவித்தால் அது ஓர் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தை மத்திய அரசு கோட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் பரிந்துரைத்துள்ளது.