வடமாகாண சபையின் அமைச்சரவையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி துறக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருக்கமான சில தரப்புக்கள் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனூடாக மக்களின் அனுதாபங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குச் சுட்டிக் காட்டியுள்ள போதிலும், அந்த யோசனையை இதுவரையில் முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் வடமாகாண அமைச்சரவை மறுசீரமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சரை, டெனீஸ்வரனையும் உள்ளடக்கியதாக அமைச்சரவையைப் பரிந்துரைக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்ட போதிலும், முதலமைச்சர் இதுவரை அதனைச் செய்யவில்லை என்பதுடன், நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக தன்னால் அந்தப் பணியைச் செய்ய முடியாது என்று கூறிவருகின்றார்.
இதனால் வடக்கு அமைச்சரவை செயற்பட முடியாத நிலையில், வடமாகாணத்தின் நிறைவேற்று மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தேக்கமடைந்துள்ளன.
இதற்கிடையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்து முதலமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 7ஆம் நாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்பட மூன்று அமைச்சர்களை மன்றில் தோன்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் நெருக்கடி நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து தப்பிப்பதற்கு விடுபடுவதற்கு முதலமைச்சர் பதவியைத்துறப்பதே ஒரே வழி என்று விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைவதற்கு இன்னமும் 70 நாள்களே இருப்பதனால், பதவி துறப்பதில் எந்தப் பிரச்சினையும் வராது என்றும், பதவிதுறப்பதன் ஊடாக மக்களின் அனுதாப அலையைத் திரட்ட முடியும் என்றும் அவருக்கு கூறப்பட்டுள்ளது.
எனினும் கூட்டமைப்பின் தலைமை வடக்கு அமைச்சரவை நெருக்கடி குறித்து ஆராய்வதால், பதவி துறக்கும் ஆலோசனையை முதலமைச்சர் தற்போதைய நிலமையில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறியமுடிகின்றது.