யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, காவல்துறையினரும், சிறிலங்கா படையினரும், தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய் போன்ற பிரிவுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் மறைவிடங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே 29 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களிடம் இருந்து ஏழு வாள்களும், எட்டு உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
வடக்கில் 53 காவல் நிலையங்கள் உள்ள போதிலும், நான்கு காவல்நிலையப் பகுதிகளில் மாத்திரம், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன எனவும், பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்தே, வன்முறைக் குழுவினரின் மறைவிடங்களில் சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களிடம் எந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது எனவும், சில போட்டியாளர்களை இலக்கு வைப்பதற்காக, சில பிரதேச அரசியல்வாதிகள், வணிகர்கள் இவர்களின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றும் அவர் விபரித்துள்ளார்.
இத்தகைய குழுக்களின் செயற்பாடுகள் குறித்து தமது தொலைபேசி இலக்கத்துக்கு தகவல்களை அளிக்க முடியும் எனவும், அவ்வாறு அளிக்கப்படும் தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும், தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.