பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு பன்னாட்டுப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு ஒன்று கட்டாயம் அமைக் கப்படவேண்டும் என்று யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமியற்றப்பட்டு இந்தப் பணியகம் இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட போதிலும், இந்தப் பணியகத்தின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் பணியகம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள நிலையில், பணியகத்தின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான பன்னாட்டுக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையைப் பொது அமைப்புகள் நேற்று முன்வைத்துள்ளன.
யாழ்ப்பாண அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் நேற்று நடந்த கலந்துரையாடலின்போது இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இணையத்தின் தலைவர் தேவானந்த் தலைமையில் நடந்த இந்தக் கலந்துரையாடலில், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமற்போனோர் தொடர்பில் பணியாற்றும் தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அதற்கான பணியகம் அமைக்கப்பட்டமை முன்னேற்றகரமானதுதான் என்றபோதிலும், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக அதன் செயற்பாடுகள் அமையவில்லை என்பதும், பணியகம் நடத்தும் அமர்வுகளில் உறவினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பணியகத்தின் ஆணையாளர்கள் செவிமடுப்பதில்லை என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதோடு நின்றுவிடாமல் அதற்கான நீதியையும் வழங்கக்கூடியதாகப் பணியகம் மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், பணியகத்திற்கு ஒரு சட்ட அதிகாரம் இல்லாமல் இருப்பது உறவுகள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகின்றது எனவும், பணியகத்தின் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணியகத்தின் பணி இழப்பீடு வழங்குவதோடு நின்றுவிடாமல் காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்துவதாக அமையவேண்டும் எனவும், குறிப்பாக அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற விபரங்களும், இல்லை என்றால் அவர்களுக்கு எப்போது, யாரால், என்ன நடந்தது ஆகிய கேள்விகளுக்கு விடை கிடைக்கவேண்டும் என்பதும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள், தீர்மானங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து அதனைப் பணியகத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், இந்த விடயத்தில் அக்கறையுள்ள தொண்டு அமைப்புகளுக்கும் அனுப்பி வைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான விடயங்களில் இந்தக் கூட்டம் ஒரு தொடக்கம் மட்டுமே எனவும், இதில் அக்கறையுள்ள அமைப்புகளையும், பொது அமைப்புக்களையும் அழைத்து மேலும் பல கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம், இந்த விடயத்தில் நீதியும் நியாயமும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், தலையீடுகளற்ற வகையில் உண்மை வெளிக்கொணரப்படவும் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும், யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.