கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் அந்த நடவடிக்கைகளில் உதவுதற்காக பாதுகாப்புப் படைகளை மத்திய அரசாங்கம் மேலதிகமாக அங்கு அனுப்பி வைத்துள்ளது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் பருவ மழையின் தாக்கத்தால் இதுவரையில் குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பல உயிரிழப்புக்கள் அங்கு ஏற்பட்ட நிலசரிவுகளால் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கனமழை தொடர்வதால் மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்படுவதுடன், 12 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியார் அணை அதன் முழு கொள்ளளவான 142 அடியை எட்டியுள்ளது என கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
கொச்சி வானூர்தி நிலையத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து பாயும் நிலையில், 18ஆம் நாள் வரை அந்த வானூர்தி நிலையம் மூடப்படும் என்றும் கேரள முதல்வர் பணிமனை அறிவித்துள்ளது.
இதனிடையே முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்றும், அணையின் நீர் மட்டத்தை 139 அடியில் பராமரிக்கவேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்து்ளளார்.