இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணங்கியுள்ளன எனவும், அதற்காகப் புதிய அரசமைப்பு உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், எனினும் அந்த முயற்சி அவ்வளவு இலகுவானது அல்ல என்பதுடன், அதனை நிறைவேற்றுவது இலேசான காரியமும் அல்ல எனவும், இலங்கை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 3 அபிவிருத்தித் திட்டங்களை நேற்று ஆரம்பித்து வைத்தபின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன எனவும், இனங்களுக்கிடையிலான வெறுப்புணர்வுகளுக்கு இடமளிக்காது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கு அனைவரும் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலுள்ள பிரச்சினைகளை கையாள்வது தொடர்பாக ஏற்கனவே வடபகுதி மக்களுக்கு சுதந்திரத்தையும், உரிமையையும், சுயாதீனமான செயற்பாட்டையும் வழங்கியுள்ளதாகவும், வடக்கில் உரிமைகளைக் கோரி போராட்டம் நடத்துவதனை தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளதாகவும், அந்த உரிமைகள் கிடைத்தால் முதலில் மகிழ்ச்சியடைவது தானாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசுக்கு எதிராக போராட்டங்களையும், கோசங்களையும், பணிப் புறக்கணிப்புக்களையும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதனையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.