பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ நிலவரம் தீவிரமடைந்துவரும் நிலையில், அதன் பாதிப்புகள் கல்கரி மற்றும் வின்னிபெக் வரையில் வியாபித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 500க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், அவற்றால் ஏற்பட்ட புகைமூட்டம் கல்கரியை மூடியுள்ளதுடன், அது வின்னிபெக் வரையில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்பேர்ட்டாவின் பல்வேறு பாகங்களிலும் காற்றுத் தூய்மைக்கேடு குறிகாட்டி மிகவும் பாரதூரமான அளவான பத்து புள்ளிகளை எட்டியுள்ளதுடன், மனிட்டோபாவில் இந்த வார இறுதியில் அது 3 ஆக பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுத்தீப் பரவலின் தீவிரத் தன்மையினை அடுத்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாநிலம் தழுவிய அளவில் கடந்த புதன்கிழமை அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் அங்கிருந்து வெளியேறும் புகை கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், எனினும் குளிரான வானிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது இன்னமும் தெற்கு நோக்கி நகரக்கூடும் என்றும், இது ஓரளவு தெளிவான காற்றினை ஏற்படுத்தக்கூடும் என்ற போதிலும், மீண்டும் புகை மூட்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள புகைமூட்டம் காரணமாக கல்கரியில் வெளிப்புற நீச்சல் தடாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், வீடு வீடாக மேற்கொள்ளப்படும் உணவு வினியோகங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.