ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனக்கு நினைவில்லை என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் 3 மணித்தியாலங்களாக வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில், அந்த விசாரணைகளுக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறான விசாரணைகள் அரசியல் தேவை கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அரசாங்கத்தின் பழிவாங்கும் படலத்தின் ஒரு அங்கமே இது என்றும், சபாநாயகர் கரு ஜயசூரியவே தன் மீதான விசாரணைகளுக்கு காரணம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடுத்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற இருப்பதாக தெரியவருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இரவு 10 மணியளவில் கீத் நொயார், தெஹிவளை வைத்தியா வீதியில், ஆயுத முனையில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், அன்றைய அரசாங்கத்தில் பொதுநிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜயசூரிய உடனடியாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்டு, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனை திட்டமிட்டு எவரோ செய்துள்ளதாகவும், கீத் நொயாருக்கு ஏதேனும் நடந்தால், தான் அரசாங்கத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, இது குறித்து குழம்பிக் கொள்ள வேண்டாம் எனவும், அதனை தான் தேடிப்பார்ப்பதாகவும் கூறியுள்ள நிலையில், இதன் பின்னர் மகிந்த ராஜபக்ச அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அன்றைய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜனர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரன, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியதன் பயனாக, கீத் நொயார், மல்வானை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.