காணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தற்போதுவரை தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்று காணாமல் போனோர் தொடர்பான பணியகம் தெரிவித்துள்ளது.
இறுதி போரில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலில் உள்ள பலர் வெளிநாடுகளில் மாற்றுப் பெயர்களில் உள்ளனர் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
எனவே அனைத்துலக நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தங்களது பெயர் விபரங்களை வெளியிடவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் விசாரணைகளில் இது குறித்த தகவல் எதுவும் கிடைக்கப்பெற்றுள்ளதா என்று பணியகத்தின் தலைவரான சனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸிடம் வினவப்பட்ட போதே, காணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தமக்கு இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.