இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில் நாளை 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோதான் இந்தியாவில் தொடரை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் இந்தியா வெற்றிக்காகவே விளையாடும்.
முதல் இரண்டு டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்திற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும். வீரர்கள் அவரவர்கள் வரிசையில் களம் இறங்குவார்கள் என்பதற்கு உத்தரவாதம் வழங்க இயலாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வீரர்கள் அந்தந்த வரிசையில் களம் இறங்குவார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்க இயலாது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே ஆப்சன் மட்டுமே உள்ளது.
ஒவ்வொரு முறையும் 100 ரன்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்பது முக்கியமானது என விவாதித்தோம். எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், பயந்தால் நாம் செய்ய வேண்டிய வேலை சரியாக நடக்காது. ஆடுகளத்தில் சரண்டர் ஆகி விடக்கூடாது என்பது வீரர்களிடையே வலியுறுத்தப்பட்டது.
முதலில் வீரர்கள் 40 முதல் 50 ரன்கள் அடிப்பது முக்கியமானது. தனிப்பட்ட வீரர்களின் எதிர்பார்ப்பில் இருந்து நாம் மீள வேண்டும். அதன்பின் டிரென்ட் பிரிட்ஜ் சூழ்நிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி விளையாடலாம்’’ என்றார்.