எங்களின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு உதவ முன் வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்குப் பல பகுதிகளிலிருந்து உதவிக் கரங்கள் நீள்கின்றன. அந்தவகையில் கேரள மக்கள் அதிகமாக வசிக்கும் வெளிநாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் உதவ முன்வந்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகமத் பின் ராஷித் அல் மாக்டோம் கூறும்போது, “கேரளாவுக்கு உதவி செய்வது எங்களது கடமை. ஐக்கிய அரபு அமீரகத்தில் பல கேரள மக்கள் வசித்து வருகின்றனர்.
எங்களது வெற்றியில் கேரள மக்களுக்கு தற்போது பங்குண்டு. கேரளாவுக்கு உதவுவதற்காக சிறப்புக் குழு ஒன்றை விரைவில் அமைக்க இருக்கிறோம். இதில் அனைவரும் பங்கேற்க வலியுறுத்தி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.