பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பாகங்களிலும் தீவிரமடைந்துவரும் காட்டுத்தீப் பரவல் காரணமாக, மாநிலத்தில் பெரும்பாலும் அனைத்து பிரதேசங்களிலும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதுடன், அருகே உள்ள ஏனைய மூன்று மாகாணங்களுக்கும் புகைமூட்டம் பரவியுள்ளது.
குறிப்பாக இநத காட்டுத்தீ காரணமாக அல்பேர்ட்டா, சாஸ்காச்சுவான் மற்றும் மனிட்டோபா மாநிலங்களிலும் புகையின் தாக்கத்தினால் காற்றுத் தூய்மைக் கேடு அதிகரித்துள்ளதுடன், ஒன்ராறியோவின் மேற்கு பிராந்தியங்களிலும் புகை மூட்ட எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுதீகளால் உருவான புகைமூட்டமும் வடக்கு நோக்கி நகர்ந்து கனடாவினுள் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாக கனேடிய சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவின் வோசிங்டன் பகுதியில் இருந்து பெருமளவு புகைமூட்டம் கனடாவினுள் வருவதாகவும், இன்று இரவும் நாளையும் இவ்வாறு அதிக அளவு புகை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் கனடாவின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சில நாட்களுக்கு புகைமூட்டம் சிக்கலாக விளங்கவுள்ளதாகவும் அவர் விபரித்து்ளளார்.
காற்றின் வேகம் தணிந்துள்ளதுடன், இடிமின்னல் தாக்கமும் குறைவடைந்துள்ளதால், புதிதாக ஏற்படும் தீப்பரவல்கள் தற்போதைக்கு தணிந்துள்ள போதிலும், மழைக்கான வாய்ப்பினை அறவே காணவில்லை என்பதனால், எரிந்துவரும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னமும் சிக்கலானதாகவே தொடர்வதாக பிரிட்டிஷ் கொலம்பிய வனவளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.