முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 3 ஆவது தடவையாகவும் ஜனாதிபதியாக முற்படுவதால் அவரின் தரத்தை தாழ்த்திக் கொள்கிறார் என்று தெரிவிக்கும் துஷார இந்துனில் அமரசேன எம்.பி, “கோட்டாவின் வருகைக்கு மஹிந்தவும் அஞ்சுகிறார்” என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்நாட்டு மக்கள் மாத்திரமன்றி முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அச்சப்படுகிறார். காரணம், கோட்டாவின் வருகை தனது புதல்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கிவிடும் என்பதை அவர் அறிந்துள்ளார்.
அதனாலேயே, 3 ஆவது தடவையாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகப்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது குறித்த கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதனால் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் சிறிதளவு கௌரவத்தையும் அவரே தாழ்த்திக்கொள்ள முற்படுகிறார்” என்றும் தெரிவித்தார்.