இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் வெற்றியடைந்துள்ளது. நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக காலை 10 மணி முதல் சுமார் இருமணிநேரம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.போராட்டத்தினை குழப்பியடிக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழரசுக்கட்சியினரும் அதன் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான முன்னாள் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கமும் பங்கெடுத்து ஆதரவளித்தனர்.
அரசியல் கட்சிகள், இந்து அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் கலந்து கொண்ட போராட்டமாக இன்றைய போராட்டம் அமைந்திருந்தது.
தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எம்மை பாரம்பரியத்தை பாதுகாக்க ஒன்றிணைய வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலய அறங்காவலர் சபை அழைப்புவிடுத்திருந்தது.
தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியங்களை பாதுகாத்துக்கொள்ள இன்றைய போராட்டம் முக்கிய செய்தியினை வழங்கியுள்ளது.
யுத்தம் மற்றும் இதன் தாக்கத்தில் இருந்தும் மீள தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது காலாசாhர பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப்பாதுகாத்து வருகின்ற நிலையில் பேரினவாத சக்திகளின் எதேச்சதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைகின்றது.
இவ் வகையிலேயே 200 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களால் வழிபாடுகளில் ஈடுபட்டு வரப்படும் வெடுங்;குநாறிமலை என்பது நாகர் காலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க கூடிய ஒரு விடயமாகவும் அதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதனையும் தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் அப்பகுதி மக்களால் இவ் ஆலயப்பகுதி தெய்வீக பிரதேசமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந் நிலையில் ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இப் பிரதேசத்தில் உள்ளவர்களால் இங்குள்ள ஆதி விக்கிரகங்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஆதி சிவனுக்கும் உமை அம்மைக்கும் பயபக்தியுடனும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சென்று வழிபாடுகளை 5 தலைமுறைகள் கடந்தும் பல்லாண்டு காலமாக செய்துவரும் நிலையில் இன்று அதனை தொல்லியலுக்குரிய இடமாக ஆக்கிரமித்துக்கொள்ள இலங்கை தொல்லியல் திணைக்களம் முனைப்புக்காட்டி வருகின்றது.
தமிழர்களது மரபுசார்ந்த பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி அதனை பாதுகாப்பதாக தெரிவித்து பௌத்த மேலாதிக்க சிந்தனைகொண்டு பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளதனை கிழக்கில் கன்னியா வென்னீரூறிலும் தமிழர் வழிபாட்டு இடமான கதிர்காமத்திலும் அம்பலமாகியிருந்தது.
இந் நிலை வடக்கில் உள்ள வெடுங்குநாறி மலைக்கு ஏற்படக்கூடாது என்பதில் வடபுலத்து தமிழர்கள் உணர்ந்து போராட்ட களத்தில் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.