வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க விகாரைகளை நிர்மாணித்து வருவதுடன், பிக்குகளையும் கொண்டுவந்து அமர்த்துவதாக வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெரிவுசெய்யப்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மையில் இரகசியமாக கிளிநொச்சிக்கு சென்றிருந்த பிரதமர், அங்கு பிக்கு ஒருவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டதுடன், அங்கு அவர் பிக்குவுடன் என்ன பேசிருப்பாரெனவும் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் ஒரு புறம் எமது பிரச்சினைக்கானத் தீர்வைப் பெறுவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டாலும், மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுடைய காலில் நிற்க வேண்டும் என்பதற்கான போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





