பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மக்சிம் பேர்னியர்(Maxime Bernier) கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதுடன், தனது புதி கட்சியைத் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள கியூபெக் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், மத்திய அரசு மட்டத்திலான, ஊழலற்ற, சுயாதீனமான கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபரில் மத்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தனது புதிய கட்சி தயாராகிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக பழமைவாதக் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டிருந்த அவர், தற்போதய தலைவர் ஆன்ட்ரூ ஷேரிடம்(Andrew Scheer) சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அண்மைக் காலமாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ மீதும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்த அவர், பிரதமர் ரூடோவின் குடிவரவுக் கொள்கைகளை கடுமையாக சாடியதுடன், பல்கலாசார நிலைப்பாடு அளவுக்க அதிகமாக செல்வதாகவும் கண்டணம் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் இன்று ஊடக மாநாடு ஒன்றினை கூட்டிய அவர், பெருமளவு ஊடகவியலாளர்கள் மத்தியில் வைத்து, பழமைவாதக் கட்சியை விட்டு விலகுவதாகவும், எனினும் இந்த பதவி விலகல் குறித்து ஏனைய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருடனும் கலந்துரையாடவில்லை என்றும் கூறியுள்ளார்.
தான் தனது அரசியலை வேறு விதத்தில் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும், மில்லியன் கணக்கான கனேடியர்களுக்காக குரல் கொடுப்பதற்கு மாற்று வழியினைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும், சுதந்திரத்திற்காகவும், பொறுப்புக்கூறலுக்காகவும், நீதிக்காவும், மரியாதைக்காகவும் தொடர்ந்து போராடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.