21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரையில் காணாமலாக்கப்பட்டிருக்கலாம் என்று காணாமல் போனோருக்கான அலுவலகம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கையே இறுதியானது எனும் முடிவுக்கு வரமுடியாது எனவும் அந்த அலுவலகத்தின் தலைவரும், சனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோருக்கான அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களைபோல் அல்லாது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை கண்டறியும் செயற்பாடுகளில் ஈடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, 16 ஆயிரம் பேரும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும் பரணகம ஆணைக்குழுவின் தரவுகளின்படி 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், கிராம சேவகர்களூடாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு பெற்றுக்கொண்டுள்ள தரவுகளின்படி 13 ஆயிரம் பேரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
எனவே குறித்த இந்த தரவுகளின் அடிப்படையில், உறுதியாக கூறமுடியாவிட்டாலும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் சாலிய பீரிஸ் உறுதியளித்து்ளளார்.
இந்த மனித எச்சங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்போது நடைபெற்றுவருகின்ற மனித எச்சங்கள் தொடர்பான அகழ்விற்கு தமது ஆணைக்குழு நேரடியான பங்களிப்பினை வழங்குவதுடன், அது தொடர்பான விடயங்களையும் மதிப்பீடு செய்து வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.