இலங்கையின் வடக்கு- கிழக்கில் மீள்கட்டுமானப் பணிகளுக்கு உதவ விருப்பம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான லூ சோங், ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இப்போது நிலைமைகள் வித்தியாசமாக உள்ளது எனவும், வடக்கு – கிழக்கில் பின்தங்கிய பகுதிகளில், இலங்கை அரசுக்கும் தமிழ்ச் சமூகங்களுக்கும் உதவும் வகையில், அதிகமான திட்டங்களை முன்னெடுக்க தாங்கள் விருப்பம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வீடுகள், வீதிகளை அமைப்பது, நீரைச் சேமித்து வைக்கும் திட்டங்களை, ஏனைய போட்டியாளர்களை விட குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு சீனா முன்வந்திருப்பதாக இலங்கையின் இரண்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுடனான விவகாரங்கள் உணர்வுபூர்வமானவை என்றுகூறி, இந்த அமைச்சர்களில் ஒருவர் தனது பெயரை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார் என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.