மறைந்த அமெரிக்க செனட்டர் யோன் மெக்கைனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்கா முழுவதும் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மெக்கைனுக்குத் தகுந்த மரியாதை செலுத்தப்படவேண்டும் என்று முன்னாள் இராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நாடெங்கும் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடவேண்டும் என்று அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை மெக்கைனின் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ள நிலையில், அதுவரை கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மெக்கைனுக்கு உடனடியாக மரியாதை வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தவறியதன் காரணமாக, அதிருப்தி அடைந்த பொதுமக்கள், இராணுவ வீரர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ட்ரம்பை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூளைப் புற்றுநோயால் அவதியுற்று வந்த செனட்டர் மெக்கைன் தமது 81வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.