அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்த இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளமையானது, கனடாவுடன் கூடிய வர்த்தக ஒப்பந்தங்களில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையேயான, NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டுக்கு, இந்த புதிய அமெரிக்க மெக்சிக்கோ இணக்கப்பாடு தாக்கத்தினை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
நீண்டகாலமாக நடப்பில் இருந்துவந்த NAFTA உடன்பாட்டினை மாற்றி அமைக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக, குறித்த அந்த விவகாரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேசையில் உள்ள நிலையில், அதற்கு அப்பால் சென்று அமெரிக்காவும் மெக்சிக்கோவும் இந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தமக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இது NAFTA உடன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல, அல்லது இல்லாது செய்ய உதவும் என்று கூறியுள்ளார்.
அத்துடன் கனடா தம்முடனான வர்த்தக விடயங்களில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், கனடாவின் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதிக்கவேண்டியிருக்கும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் இதன்போது எச்சரித்துள்ளார்.
கனடாவுடன் விரைவில் பேச்சுக்களை தொடங்கவுள்ளதாகவும், தம்முடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு கனடா கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாகவும், மெக்சிக்கோ அதிபருடன் இன்று தொலைபேசி வாயிலாக மேற்கொண்ட உரையாடலின் போது டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பொருட்களுக்கு வரி விதிப்பது அல்லது இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது என்ற இரண்டு தெரிவுகளை தாம் முன்வைத்துள்ளதாகவும், வரி விதிப்பது என்பது தமக்கு மிகவும் இலகுவான காரியம் என்றும், ஆனால் பேச்சுகளில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது கனடாவுக்கு நல்லது என்றும் டொனால்ட் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.