ஏமன் நாட்டின் போர் நடைபெற்ற பகுதிகளில் சகல தரப்பினரும் போர் குற்றங்களை இழைத்ததாக தாங்கள் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவொன்று தெரிவித்துள்ளது.
குறித்த குழு தயாரித்துள்ள முதல் அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏமன் கிளர்ச்சின் போது அந்த நாட்டு படைகளுக்கு உதவும் சவுதி தலைமையிலான கூட்டணியும், ஹௌதி கிளர்ச்சியாளர்களும் மக்களை காப்பாற்ற போதியளவிலான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தல், சிறுவர்களை போராளிகளாக இணைத்தல் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏமன் போர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் தயாரித்துள்ள இந்த முதலாவது அறிக்கை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பேரவையில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.