வலிகாமம் வடக்கின் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் அடுத்த வார இறுதியில் விடுவிப்பு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் படையினரது பங்கெடுப்புடன் விகாரை அமைப்பு வேலைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வுக்கு வருகை தந்த சனாதிபதியால் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் அடுத்த வார இறுதியில் விடுவிக்கப்படவுள்ளது.
பாடசாலையில் உள்ள இராணுவ தளபாடங்கள் மற்றும் சுற்றி அடிக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் சனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் கலந்துகொண்ட இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்காவுடன் உரையாடிய அரச அதிபர் வேதநாயன், இந்தப் பாடசாலை விடுவிப்பு தொடர்பில் பேசியுள்ளார்.
இதன்போது அடுத்தவார இறுதியில் குறித்த பாடசாலை அரச அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஒருபுறம் பாடசாலையினை விடுவிப்பது தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்தவாறு மறுபுறம் அருகாக விகாரையினை அமைக்கும் பணிகள் மைத்திரியின் அசீர்வாதத்துடன் கட்டியெழுப்பப்பட்டுவருகின்றமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.