NAFTA எனப்படும் வடஅமெரிக்கத் தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நாளை வெள்ளிக்கிழமை இணக்கப்பாடு எட்டப்படக்கூடும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடங்கியுள்ள புதிய பேச்சுவார்த்தைகளின் பலனாக, இந்த வார இறுதியில் உடன்பாடு காணப்படும் என்று இரண்டு நாடுகளின்
பேச்சுவார்த்தைக் குழுவினரும் இன்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிகவும் தீவிரமான புதிய நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், இதன்போது நாளை வெள்ளிக்கிழமை ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என்று இரண்டு நாடுகளின் தலைவர்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
நேற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான தனது இரண்டாவது பேச்சுவார்த்தைகளின் பின்னர், நேற்று இரவு அது குறித்து கருத்து வெளியிட்ட கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், அதிகாரிகள் இரவிரவாக
இது குறித்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர்களும் இன்று வியாழக்கிழமை இது குறித்து மீண்டும் ஒன்றுகூடி, இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை விவகாரத்தில் இது மிகவும் பரபரப்பான காலகட்டம் எனவும், மிகவும் வேகமாக பல்வேறு காரியங்களை செய்து முடிக்கவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.