இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில்
அநேகமானோர் காணாமல்போனோர் என்று குறிப்பிடுகின்றனர் எனவும், அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது என்றும், திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் குறிப்பிடுவது பொருத்தமற்றாகும் என்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான அனைத்துலக நாளை முன்னிட்டு காணாமல்போனோர் அலுவலகத்தால் ‘இனிமேலும் காணாமலாக்கப்படுவதை தடுப்போம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நேற்று ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனைத்துலக ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது எனவும், மனித உரிமை தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடாகவே இலங்கை பார்க்கப்படுகின்றது என்றும் அவர் கூறியுளளார்.
இலவசக்கல்வி, இலவச மருத்துவம் மற்றும் தனிமனித அபிவிருத்தி என்பவற்றில் இலங்கை முன்னிலையில் உள்ள போதிலும், இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படுதல் எனும் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் நீதித்துறை சார்ந்த பிரச்சினையாக மாத்திரமே பார்க்கப்படுகின்ற போதிலும், அது நீதித்துறைசார் பிரச்சினை என்பதுடன், பாரியதொரு சமூகப்பிரச்சினையும் ஆகும் எனவும், ஆனால் எமது சமூகத்திலே இவ்விடயம் தொடர்பில் தெளிவற்ற நிலையே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பேசும் போது அநேகம்பேர் அதனை இன, மத ரீதியாகப் பார்ப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகமாகும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனையை அவர்களின் நிலையிலிருந்து நோக்கினால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.