வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சலால் கடந்த 5 நாட்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த மாநில சுகாதாரத்துறை இது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையினால் அந்த மாநிலம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
கன மழைக்கு அந்த மாநிலத்தில் 476 பேர் பலியாகியுள்ளதுடன், நிவாரண முகாம்களில் சுமார் 9 இலட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது வெள்ளம் வடிந்த சூழலில் மக்கள் வீடுகளுக்கு திரும்புவதாகவும், அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்படும் சூழலில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.