தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டது தான் தமிழ்ப் பிரதேசங்களில் முனைப்புடன் செயற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் என்பதனை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ச்சியாக இருக்கும் தமிழர் பாரம்பரிய நிலப்பரப்பைக் கூறுபோடும் தந்திரோபாயமே சிங்களக் குடியேற்றங்கள் எனவும், இலங்கையை சிங்களவர்களுக்கே உரிய பௌத்த நாடாக்கும் நோக்கில் நீண்டகாலத்திட்டமாக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் எனவும் அது விபரித்துள்ளது.
மகாவலித்திட்டமானது 1961ம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசால் முன்னெடுக்கப்பட்டது என்பதுடன், சிறிமாவிற்குப் பின்பு பிரதமராக இருந்த டட்லி செனனாயக்கா மகாவலித் திட்டத்தை மேலும் துரிதமாகச் செயற்படுத்தினார் எனவும், மகாவலித்திட்டத்தின் ஊடாகக் கிடைத்த நிதியுதவியுடன் தெற்குப் பகுதிகள் மிகத் துரிதகதியில் முன்னேற்றப்பட்டன எனவும் அது விபரித்துள்ளது.
மணலாற்றுப் பகுதியில் தமிழர்களால் நடாத்தப்பட்ட சிலோன் பாம், டொலர் பாம், கென் பாம் என்பன காலப்போக்கில் ஜே. ஆர். ஜெயவர்தன அரசில் தமிழர்களை வலுக்கட்டாயமாக விரட்டி விட்டு சிங்களவர்கள் பறித்துக்கொண்டனர் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள இதயபூமியைக் கைப்பற்றுவதன் ஊடாக தமிழர் பாரம்பரிய தொடர் நிலப்பரப்பைத் துண்டாடுவதே சிங்களத்தின் நோக்கமாக இருந்த நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் எழுச்சி அடைந்த காலத்தில் சிங்களத்தின் குடியேற்றத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதுடன், அந்தக்கால கட்டத்தில் தான் தமிழர்கள் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட்டன என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
2009ம் ஆண்டு ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர், சிங்களப் பேரினவாதம் தலைதூக்கி தனது கோர முகத்தை மீண்டும் காட்டத்தொடங்கியுள்ளது எனவும், “நல்லாட்சி” என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் ரணில்-மைத்திரி அரசு தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவோம் என்று கூறியவண்ணம், மறுபுறத்தில் தமிழர்களின் இருப்பை ஒழிப்பதிலேயே குறியாக இருக்கின்றது எனவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
சந்திரிக்கா அம்மையார் மற்றும் மகிந்த ராஐபக்ச அரசுகளில் மகாவலித் திட்டத்தை அதிகம் கையாண்டவர் இதே மைத்திரிபால சிறிசேன தான் என்பதை மக்கள் மறக்கக்கூடாது என்பதையும், மகாவலி கங்கைத்திட்டத்தில் புதைந்து கிடக்கும் பேரினவாதக் கொள்கையானது தமிழர்களை இனவழிப்புச் செய்வதற்காகவே தீட்டப்பட்டது என்பதையும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூற்றுப்படி, மணலாறு பறிபோனால் ஒட்டுமொத்த தமிழர் தேசமுமே பறிபோனதிற்குச் சமம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, ஆகவே களத்திலும், புலத்திலும் போராட்டங்கள் வெடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஓட்டுமொத்தத் தமிழர்களும் பேரெழுச்சி கொண்டால் மட்டுமே இப்படியான பூர்வீக நில அபகரிபுகளை நிறுத்த முடியும் என்ற வகையில், களமும் புலமும் நேர்கோட்டில் பயணித்தால் மட்டுமே ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிட்டும் எனவும், ஆகவே தாயக மக்களை ஒரு தேசியமாகச் சிந்தித்துச் செயற்பட வைக்க, எல்லா அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐநாவில் நடைபெறவிருக்கும் 38 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு, எதிர்வரும் 17 ம் நாள் செப்ரெம்பர் மாதம் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, எமக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளிற்கு எதிராகக் குரல் கொடுப்போம் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுத்துள்ளது.