சிறிலங்கா இராணுவம் காணிகள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு கீழ்ப்படிய மறுக்கிறது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து இன்றுடன் விலகிச் செல்லும் செயிட் ராட் அல் ஹுசேன், ‘தி எகொனொமிஸ்ட்’ இதழில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை தான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்ததாகவும், பல பத்தாண்டுகளுக்கு முன்னர் தமது காணிகளை இராணுவத்திடம் இழந்தவர்கள் இன்னமும், பெரும்பாலும் அடிப்படை வசதிகளின்றி, மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் விடுவிப்பதில், இலங்கை அரசாங்கம் உறுதியாக இருந்தாலும் கூட, சிறிலங்கா இராணுவம் கீழ்ப்படிய மறுக்கிறது எனவும், இதனால் அப்பாவிகளான இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.