ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையானது, மியன்மாரின் சட்ட ஆட்சி மற்றும் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர்களின் விடுதலையை வலியுறுத்தும் அனைத்துலக நாடுகளுடன் தாமும் இணைந்து குரல் கொடுக்கவுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக செய்தி சேகரித்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவருக்கும் மியன்மார் நீதிமன்றத்தால் நேற்று திங்கட்கிழமை ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காவல்துறை அதிகாரி கொடுத்த உத்தியோகபூர்வ ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வா லோன் மற்றும் கியாவ் சோ லூ இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததாகவும், தேசிய இரகசிய சட்டத்தை மீறியமை நிரூபிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டே அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது காவல்துறையினரால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், தாம் நிரபராதிகள் என்றும் குற்றம்சாட்டபட்ட ஊடகவியலாளர்கள் இருவரும் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.