மியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் இரண்டு ஊடகவியலாளர்களையும் விடுவிக்குமாறு கோரி, ஹொங்கொங்கில் அமைந்துள்ள மியன்மார் உதவித்தூதரகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய புகலிடக்கோரிக்கையாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் ஹொங் கொங் சமூக குடியுரிமைக் கழகம் ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
மியன்மார் அரசாங்கத்தினால் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஊடகவியலாளர்களையும் விடுவிக்குமாறும், ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றியது மியன்மார் அரசாங்கத்தின் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பாகும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இதன்போது மியன்மார் தலைவி ஆங் சான் சூகியின் உருவப்படத்திற்கு கொம்புகள் மற்றும் நீண்ட பற்களை வரைந்து அரக்கி போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி வந்ததுடன் மியன்மார் துனணத் தூதரக சுவர்களில் அவற்றை ஒட்டிச்சென்றுள்ளனர்.
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலரை கொன்று குவித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அரச இரகசியங்களை சேகரித்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் 7ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி கடந்த திங்கட்கிழமை மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.