இலங்கையில் இராணுவம் படுகொலைகளை செய்தது என்பதற்கு சான்றாக மாணவி கிருஷாந்தியின் கொலை காணப்படுகின்றது என்று வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புடன் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே வடமாகாண சபையும் உள்ளதென வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவரான தவராசா தெரிவித்துள்ளார்.
இன்றையநாள் செம்மணியில் இடம்பெற்ற, சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை இறுதி போரின்போது சிறிலங்கா இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு இலங்கையில் ஒரு போதும் நியாயம் கிடைக்காது என்று, இந்த நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
போரில் எவ்விதத்திலும் தொடர்புபடாத பலர் அரச படையினரால் மிக மோசமாகக் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாறான கொலைகளுக்கு அனைத்துலகம் தலையீடு செய்தால் மாத்திரமே தீர்வு கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான அனைத்து கொலைகளும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டுமாயின், நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், அனைத்துலக நீதி விசாரணை நடத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.