ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஆறு மாத பிணை கோரி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றுள்ளார்.
தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பிணை வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு யூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்த வழக்கையே இன்று வெள்ளிக்கிழமை அவர் மீளப்பெற்றுள்ளார்.
குறித்த மனு மீதான வழக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதில் மனுவொன்றை தாக்கல் செய்தது.
அதில் நளினியை பிணையில் விடுவித்தால் அவர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருந்ததையடுத்து, பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதால், தனக்கும் பிணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நளினி மீண்டுமொரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தனக்கு பிணை தேவையில்லை என்றும், அதனை தான் மீளப்பெறுவதாகவும் நளினி நீதிமன்றில் தெரிவித்துள்ளதையடுத்து, நளினியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழுபேரையும் விடுவிக்கும் உரிமை தமிழக அரசிற்கு உள்ளதென்றும், அது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளதென்றும், உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.